அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: September 29, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரையை அடுத்த கீழக்குயில் குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு தொழில்நுட்ப மண்டல மையத்தினை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மதுரையை அடுத்த கீழக்குயில் குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப மண்டல மையத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பேசியதாவது:

இது வளர்ந்து வரும் காலகட்டம். இதில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. உதாரணமாக இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்பான ஸ்டார் அப் கண்காட்சியில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். மதுரை மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் நமக்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை. எதிர்வரும் 25 ஆண்டுகளில் உலகத்திற்கு வழிகாட்டியாக பல்வேறு துறைகளில் இந்தியா முதலிடம் இருக்கும். அதில் மிகவும் முக்கியமான இடத்தில் தமிழகம் இருக்கும். இம்மையத்தின் வாயிலாக இனி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகம் அறிந்து கொள்ளும்.

தற்போது நடக்கும் உலகளாவிய மாற்றங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் நமது கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டால் முதன்மை சக்தியாக திகழலாம். இவ்வாறு கூறினார். இவ்விழாவில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன், தலைமை நிர்வாக அலுவலர் வனிதா வேணு கோபால், அண்ணா பல்கலைக்கழக மதுரை வளாகம் முதல்வர் லிங்கதுரை, மற்றும் மதுரை திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran